
கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும், குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி தொடங்கியுள்ளது. அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் அதிக அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகளை அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக கொள்முதல் செய்யாமல் காலதாமதப்படுத்துவதாகவும், மறைமுகமாக கையூட்டு கொடுப்பவர்களின் நெல் மூட்டைகளை மட்டுமே அவ்வப்போது எடைபோட்டு, கொள்முதல் செய்துகொள்வதாகவும், கையூட்டு கொடுக்காத மற்ற விவசாயிகளின் நெல் மூட்டைகளை எடைபோடாமல் காலம் தாழ்த்துவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் திட்டக்குடியை அடுத்த சிறுமுளை கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் செய்வதற்காக விவசாயி ஒருவரிடம் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் 115 மூட்டைக்கு 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறி, லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகியது.

கரனோ வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில், வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவரும் விவசாயிகளிடத்தில், அதிகாரிகள் நெல் மூட்டை கொள்முதல் செய்வதற்காக லஞ்சம் கேட்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், சம்பந்தப்பட்ட சிறுமூளை கிராமத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், லஞ்சம் வாங்குவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், இந்தச் சம்பவம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் கண்ணதாசனை தற்காலிக பணிநீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தென்மண்டல மேலாளர் தேன்மொழி உத்தரவிட்டுள்ளார்.