டிசம்பர் 3 இயக்கம், மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம், இந்திய தொழுநோய் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், கடந்த மாதம் கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது. அதில் 14 மாற்றுத்திறன் ஜோடிகள் தேர்வாகினர். அவர்களுக்கு இன்று (16/09/2019) காலை இலவச திருமண விழா கடலூர் பாடலீஸ்வர் கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சம்பத் சிறப்பு விருந்திரனாக அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அமைச்சர் சம்பத் ஊரில் இல்லாததால் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம் அ.தி.மு.கவினரும், அதிகாரிகளுடன் சீர்வரிசைகள் வழங்கி திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர்.
அதேசமயம் 14 ஜோடிகளில் 1 ஜோடி முஸ்லீம் ஜோடி. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ரஷீத் - ஆற்காட்டை சேர்ந்த ஆப்தா பேகம் ஆகிய இந்த ஜோடியும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய ஆர்வமுடன் காத்திருந்தது. ஆனால் இஸ்லாமிய ஜோடிகளுக்கு கோயிலில் திருமணம் செய்து வைக்கவோ, பதிவுச்சான்றிதழ் வழங்கவோ இயலாது என கோயில் நிர்வாகமும், ஐயரும் மறுத்துள்ளனர். ஆனால் மற்ற 13 ஜோடிகளும் நாங்கள் மாற்றுத்திறனாளிகள் என்னும் ஒற்றை இனம். எங்களுக்குள் ஜாதி, மதம் இல்லை. 14 ஜோடிகளுக்கும் ஒன்றாக திருமணம் நடக்க வேண்டும். இல்லையென்றால் வேறு இடத்தில் திருமணம் செய்து கொள்கிறோம்" என உறுதியாக இருந்தனர். அதையடுத்து அதிகாரிகளும் அ.தி.மு.க வினரும் மாற்று ஏற்பாடாக கோயிலுக்கு, வெளிப்புறமிருந்த மண்டபத்தில் வைத்து திருமணத்தை நடத்தினர்.
14 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கும் தமிழில் மந்திரம் ஓதி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். சீர் வரிசை பொருட்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் குமரன், துணை சேர்மன் குமார், நலச்சங்க தலைவர் பொன்சண்மும், டிசம்பர் 3 இயக்க மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை, மாநிலதுணைத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனுவாசன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.