கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பிணிகளாக்கிய வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல்லாங்குளம் காலனி நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சிறுமியை ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவதாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார்த்திகேயன் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் கோபியை சேர்ந்த ஆசிப் (28) என்பவரும் சிறுமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாக சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கிருஷ்ணவேணி கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிப் சிறுமியை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.