கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிறுவன் கிஷோர்(15). இவர் வடலூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி வழக்கம்போல், பள்ளிக்கு சென்ற சிறுவன் கிஷோர், பள்ளி முடிந்து மாலை பள்ளி திடலில் விளையாட்டுப் பயிற்சியில் வட்டு எறியும் பயிற்சியில் கலந்து கொண்டு உள்ளார். அப்போது அதே திடலில் மறுமுனையில் ஈட்டி எறிதல் பயிற்சி நடந்து கொண்டிருந்தது.
மற்றொரு மாணவன் ஈட்டி எறிந்த போது எதிர்பாராத விதமாக கிஷோரின் தலையில், அந்த ஈட்டி பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சிறுவன் கிஷோரை மீட்டு, அருகில் இருந்தவர்கள் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் மாணவன் கிஷோர் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அங்கிருந்து விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிஷோர் மாற்றப்பட்ட நிலையில், கிஷோர் மூலைச் சாவு அடைந்துள்ளார். மகன் மூளைச் சாவு அடைந்ததைக் கேள்விப்பட்ட அவரது தாயார், கடந்த 4 நாட்களாக போலீஸார் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். தற்போது மாணவனின் தாய் நலமாக உள்ளார்.
மாணவன் கிஷோரின் உறவினர்கள் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. பள்ளியில் உள்ள சிறிய மைதானத்தில் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் பயிற்சி ஒரே இடத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமல் வழங்கப்பட்டது தான், இந்த விபத்துக்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிறுவனின் தந்தை திருமுருகன் கூறுகையில், எனது மகனுக்கு ஏற்பட்ட சம்பவம் மற்ற மாணவர்களுக்கும் ஏற்படக் கூடாது என கண்ணீர் வழிய தெரிவித்தார். தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உரிய மைதானம் இல்லாத காரணத்தாலேயே ஈட்டி தன் மகன் மீது பாய்ந்துள்ளதால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈட்டி எறிதல் பயிற்சியின்போது மாணவன் தலையில் ஈட்டி பாய்ந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. இது குறித்து காவல் துறையினர் பள்ளி தாளார் மற்றும் பயிற்சியாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.