கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் 14வயது வெங்கடேஷ். இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளிகள் திறக்கப்படாததால் இணையவழி மூலம் பாடத்தை படித்து வந்த வெங்கடேஷ் அவ்வப்போது தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான மாடுகளை மேய்ப்பதற்கு வயல்களுக்கு ஓட்டி சென்று வருவார். கடந்த 24 ஆம் தேதி அவரது ஊர் ஏரி பகுதியில் மாடுகளை ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டிருந்தார் வெங்கடேஷ்.
அப்போது அந்த பகுதியில் செடிகளை வெட்டி கொளுத்தப்பட்ட நெருப்புடன் கூடிய சாம்பலை கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனர். அதில் மேல்பகுதி சாம்பல் அடிப்பகுதியில் நெருப்பும் இருந்துள்ளது. மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் எதிர்பாராத விதமாக அந்த சுடு சாம்பலில் காலை வைத்துள்ளார். அடியில் இருந்த நெருப்பு காலில் பட்டு தீக்காயம் ஏற்பட்டது. சூடு தாங்காமல் தடுமாறி அதில் விழுந்துள்ளார். இதனால் அவரது இரு கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டு கருகி உள்ளது. தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர் வெங்கடேசனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் சிறுவனின் உடலில் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெங்கடேசன் பரிதாபமாக நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை கந்தசாமி கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஏமப்பேர் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் நெருப்புடன் இருந்த சுடு சாம்பலை டிராக்டரில் அள்ளி சென்று ஏரிப் பகுதியில் கொட்டியுள்ளார். அது சுடு சாம்பல் என தெரியாததால் தனது மகன் அதில் தவறி விழுந்து உயிரிழக்க காரணமாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், கந்தசாமி கொடுத்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுடு சாம்பலை ஏற்றிச்சென்று ஏரி கரையில் கொட்டிய சிவாவின் டிராக்டர் சேலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சுடுசாம்பலைக் கொண்டு சென்று ஏரியில் கொட்டிய சிவா தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஏமப்பேர்குதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.