ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த சுங்கரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்செல்வன்(38). இவரது மனைவி யுவராணி. இவர்களது மகன் சஞ்சய் (14). அருள்செல்வன் சப்- காண்ட்ராக்ட் வேலை எடுத்து செய்து வந்தார். யுவராணி மின்வாரியத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சஞ்சயை அவரது தாய் ஹாஸ்டலில் தங்கி படிக்குமாறு கூறினார். ஆனால் சஞ்சயோ நான் வீட்டில் இருந்துதான் படிப்பேன் என்று அவரிடம் கூறினார். இது தொடர்பாக அவர்கள் இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் வீட்டில் இருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து யுவராணி மீது போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் யுவராணி பரிதாபமாக இறந்தார். இதனை அடுத்து சஞ்சய், கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு சஞ்சய் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் புளியம்பட்டியில் உள்ள டுட்டோரியலில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சஞ்சய் தனது தாயைக் கொன்ற குற்ற உணர்ச்சியால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அவரது உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி தோட்டத்தில் இருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை எடுத்து சஞ்சய் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதன் பின்னர் சஞ்சயை மீட்டு புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சஞ்சய் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நேற்று சஞ்சய் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் இனிமேல் சஞ்சயை காப்பாற்றுவது இயலாது எனவே வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டனர். இதனை அடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே சஞ்சய் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சஞ்சய் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.