தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் சுமார் 5500 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படும் சுமார் 550 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளத்தை பல வருடங்களாக சீரமைக்க மறந்து போனார்கள். அரசாங்கங்களும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில்தான் நீர்நிலை பாதுகாப்புக்காக தன்னெழுட்சியாக உருவான இளைஞர் அமைப்பான கடைமடைப்பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சொந்த செலவில் பெரியகுளத்தை தூர்வாரி மராமத்து செய்ய களமிறங்கினார்கள். பல லட்சம் சம்பளம் வாங்கும் இளைஞர்களும் குளம் தூர்வாரும் பணிக்காக பேராவூரணி பெரிய குளத்திற்குள் பந்தல் அமைத்து வேகாத வெயிலில் காத்திருக்கிறார்கள். இளைஞர்களின் இந்த முயற்சி பற்றி அறிந்த அமெரிக்காவில் வசிக்கும் பேராவூரணி இளைஞர் ரூ ஒரு லட்சம் கொடுத்து இளைஞர்களை ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு ஆர்வமுள்ள அத்தனை பேரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த உதவியுடன் குளம் தூர்வாரும் பணி சிறப்பாக சென்று கொண்டிருக்கும் போது நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த தனிஷ்க் சுரேஷ் என்ற சிறுவன் ஒரு உண்டியலுடன் வந்து குளம் தூர்வாரும் இளைஞர்களிடம் கொடுத்தார். நெகிழ்ந்த இளைஞர்கள் சிறுவனிடம் எதற்காக இந்த உண்டியல் என்று கேட்க.. நான் வளரும் போது தண்ணி இல்லாம போகக் கூடாதுனு குளம் வெட்டுறீங்களே அதுக்காகத் தான் நான் 7 மாத சேமிப்பு உண்டியலை கொண்டு வந்தேன் என்றார்.
அந்த சிறுவன் முன்பே உண்டியலை திறந்து எண்ணிப்பார்த்த போது அதில் ரூ 876 ரூபாய் இருந்தது. சிறுவனை கட்டியணைத்து பாராட்டிய இளைஞர்கள் அந்த தொகையை பெற்றுக் கொண்டனர். குளம் தூர்வாரத் தொடங்கியபோது இவ்வளவு பெரிய குளத்தை எப்படி தூர்வாரப் போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் தன்னார்வலர்கள் அவர்களால் இயன்ற உதவிகளை செய்து எங்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இன்று சிறுவன் தனிஷ்க் சுரேஷ் கொடுத்த நிதி பெரிய நிதியாக பார்க்கிறோம். நிச்சயம் எடுத்த பணியை தொய்வின்றி கொண்டுபோக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.