சென்னை விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரத்தினகுமார்-ராணி தம்பதி. இவர்களுக்கு கீர்த்தி சபரீஸ்கர் (10) என்ற மகன் இருந்தான். சிறப்புக் குழந்தையாக இருந்த கீர்த்தி சபரீஸ்கர் மருத்துவ சிகிச்சையில் இருந்த நிலையில் அவருக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொளத்தூர் பகுதியில் உள்ள 'ப்ளூ சீன்' என்ற தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சிக்காக சிறப்பு குழந்தை கீர்த்தி சபரீஸ்கர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நீச்சல் பயிற்சியின் பொழுது நீரில் கீர்த்தி சபரீஸ்கர் தத்தளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த அவருடைய தாயார் நீச்சல் பயிற்சியாளர் அவிலாஷிடம் குழந்தை தண்ணீரில் தத்தளிப்பதாகவும் காப்பாற்றும் படியும் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி இருந்தால்தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் என அபிலாஷ் விட்டு விட்டார். தொடர்ந்து சிறிது நேரத்தில் சிறுவன் அசைவின்றி கிடந்ததால், உடனடியாக மீட்கப்பட்ட சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் நீச்சல் பயிற்சியாளர் அபிலாஷ் மற்றும் நீச்சல் குளத்தின் உரிமையாளர் காட்வின் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இறந்த சிறுவன் கீர்த்தி சபரீஸ்கரின் உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.