சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை அபீத் காலனி பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததாக 11 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிறுவனின் சகோதரியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட தண்ணீரை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்ற வருகிறது. துர்நாற்றத்துடன் குடிநீர் வருவதாக ஏற்கனவே அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மழைநீர் செல்வதற்கு இடையூறாக சுவர் கட்டியதால் குடிநீரில் கழிவுநீர் கலந்தது தெரியவந்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் செல்வதற்கு இடையூறாக சுவர் கட்டப்பட்டதால் கழிவுநீர் செல்வது தடுக்கப்பட்டு அருகே உள்ள வளாகத்தின் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவு நீர் கலந்துள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.