தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், கட்சியை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக ஆயத்தமாகி வருகிறார். இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த தலைமையில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று(30.9.2024) நடைபெற்றது. கூட்டத்தில் என்.ஆனந்த நிர்வாகிகளின் முன்னிலையில் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது புஷ்பா என்ற பெண் ஒருவர், “எங்க அண்ண இருக்குற சொத்தை வித்து விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்தார். ஆனால் இப்போ அவர ஏன் கட்சியில இருந்து ஒதுக்கி வச்சிருக்கீங்க?” என நியாயம் கேட்டிருக்கிறார்.
இந்த நிலையில் பாதுகாப்பிற்காக அங்கு வந்த பவுன்சர்கள், நியாயம் கேட்டு என்.ஆனந்திடம் முறையிட்ட புஷ்பாவை மண்டபத்தில் இருந்த தனியறையில் அடைத்து வைத்தனர். பின்னர் இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி, வீடியோ எடுக்க கூடாது என்று பவுன்சர்கள் கூறியிருக்கிறனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவராக தங்கத்துரை இருந்து வந்திருக்கிறார். அப்போது அவரது நிலத்தை விற்று விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்ததாகவும், ஆனால் மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியாக மாறிய பிறகு தங்கதுரைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான் தங்கதுரையின் சகோதரி புஷ்பா கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனைந்திடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறுகின்றனர்.