உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாக பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரில் பிரபல புத்தகப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது.
2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த வன்முறையின் போது மே 4ம் தேதி பழங்குடியின பெண்கள் இருவர் மைத்தேயி இளைஞர்கள் பலரால் நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள். இது தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு சிறிது கால அவகாசம் தருவோம். அப்போதும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும். மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் ஆடைகளை களைந்து இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடந்த இந்த கொடூரம் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத்தெரிவித்தார்.
இந்நிலையில், பத்ரி சேஷாத்ரி பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும், யூடியூப் சேனல்களுக்கும் அவ்வப்போது பேட்டி கொடுத்து வருவார். அப்படி அவர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் பெரம்பலூர் மாவட்ட குன்னம் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில், ‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாகப் பேசியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர், ‘மணிப்பூர் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம்’ என்று பேசியுள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்தப் புகாரில் கூறியிருந்தார்.
இந்தப் புகாரை ஏற்ற பெரம்பலூர் காவல்துறையினர் அவரை இன்று காலை சென்னையில் வைத்து கைது செய்தது. மேலும், பத்ரி சேஷாத்ரி மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.