தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.
உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.
2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.