கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அலங்கிரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தேவகி. கணேசன் சிங்கப்பூரில் வேலை செய்துவந்துள்ளார். அவரது மனைவி தேவகி, நேற்று (08.11.2021) தனது இரண்டு பெண் பிள்ளைகள், மாமனார், மாமியார் உட்பட குடும்பத்தினருடன் வந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் மனு அளித்தார்.
அவரது மனுவில், ‘கடந்த 10 ஆண்டு காலமாக எனது கணவர் சிங்கப்பூரில் வேலை செய்துவந்தார். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊருக்கு வந்து எங்களுடன் தங்கியிருந்தவர், மீண்டும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று ஏற்கனவே வேலை செய்துவந்த அதே தனியார் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தார். கடந்த வாரம் எங்களுடன் தொலைபேசியில் பேசிய எனது கணவர் கணேசன், பிள்ளைகள், மாமனார், மாமியார் உட்பட எல்லோரையும் நலம் விசாரித்தார். எங்களிடம் சந்தோஷமாக பேசினார். இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி காலை 11 மணி அளவில் எனது கணவர் தற்கொலை செய்து இறந்துபோனதாக அந்த கம்பெனியில் இருந்தவர்கள் எனக்கு ஃபோன் மூலம் தகவல் தெரிவித்தனர். எனது கணவருக்கு எந்தவிதமான நோயும் இல்லை, கெட்டப் பழக்கம் எதுவும் கிடையாது. அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழையும் இல்லை. எனவே, எனது கணவர் மரணத்தில் பலத்த சந்தேகம் உள்ளது. எனது கணவருடன் தங்கியிருந்த சக நண்பர்கள் அவரை கொலை செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, எனது கணவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவரின் இறப்பிற்கு அவர் வேலை செய்த கம்பெனி தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். அவர் இறந்ததற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.’ இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.