திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பேறுகால மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தைத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், முதல் அரசு முறை பயணமாக அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று (06.07.2021) மாலை வந்தார். திருச்சியிலிருந்து மன்னார்குடி வழியாக வந்தவர், மாவட்ட எல்லையான வடுவூரில் செயல்பட்டுவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்து, அங்கிருந்த ஊழியர்களிடம் முறைகேடுகள் கலையப்பட வேண்டும் என கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து, அவரது பாட்டியாரும், கலைஞரின் தாயாருமான அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்திற்கு குடும்பத்தினரோடு சென்று மரியாதை செய்தார்.
அங்கிருந்து சன்னதி தெருவிற்கு வரும் வழியெங்கும் பொதுமக்கள் மனுக்களைக் கொடுக்க, காரில் இருந்தபடியே ஆர்வமாக மனுக்களை வாங்கிச் சென்றார். இரவு அங்கு தங்கியவர். இன்று காலை சன்னதி தெருவிலிருந்து புறப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 படுக்கை வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருந்த மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்.
கரோனா தடுப்பூசியைத் தொடர்ந்து போட செய்ததற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முதல்வருக்கு வெள்ளி செங்கோல் வழங்கினார். பிறகு கட்டடத்தில் உள்ள வசதிகள் குறித்து முதல்வர் நேரில் ஆய்வுசெய்துவிட்டு, கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளைக்குச் சென்றுள்ளார்.