புளூ வேல் விளையாட்டை பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
புளூ வேல் விளையாட்டை பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது.
புளூ வேல் விளையாட்டால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்தது. வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, புளூ வேல் விளையாட்டை பகிர்ந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷேர்இட் போன்ற ஊடகங்கள் மூலம் பகிர்வோ, இந்த விளையாட்டை டவுண்லோட் செய்யவோ உதவுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விளையாட்டினை தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். புளூ வேல் விளையாட்டு பரவாமல் இருக்க கண்காணிப்புக்களை அதிகரிக்க வேண்டும். இந்த விளையாட்டு தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த குழு அமைக்க வேண்டும். இந்த விளையாட்டை தடை செய்வது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் பதிலளிக்க வேண்டும்.
இந்த விளையாட்டு மேலும் பரவுவதை தடுக்க தகவல் தொடர்பு துறை இயக்குனரகம் ஆலோசனை வழங்க வேண்டும். இதை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் கேட்டு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை செப்.7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.