சேலத்தில் புதிதாக மேலும் நான்கு பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றுக்கு 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 375க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.
சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது 35 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மற்றவர்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நோய்த் தொற்றுக்கு சேலம் மாவட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் 8 ஆயிரம் ரூபாய் வரையிலான விலை உயர்ந்த ஊசி மருந்துகள் செலுத்தப்படுகின்றன. தொடர்ச்சியாக 14 நாள்களுக்கு இந்த ரக ஊசி மருந்து செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்குப் புதிதாக கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் இருவர், வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; மற்ற இரு நோயாளிகள், சேலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்குத் தொடர்ந்து உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது,'' என்றனர்.