மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் இதைக் கண்டித்து, பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 10ஆம் தேதி மூன்று வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கொடுமுடியை அடுத்த பழனிக்கவுண்டன் பாளையம், பாம்பகவுண்டன் பாளையம், சாணார் பாளையம், சோளங்கா பாளையம், கிளாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகள் மற்றும் விளைநிலங்களில் கறுப்புக் கொடி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக் கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி, மத்திய பா.ஜ.க. அரசுக்கும் தமிழக அ.தி.மு.க. அரசுக்கும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
டெல்லி செல்ல முடியாததால், வேளாண் சட்டத்தை எதிர்த்து, வீடுகளில் கறுப்புக் கொடி கட்டியிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட விளை பொருட்களுக்கு ஏற்கனவே கட்டுப்படி ஆகாத விலை உள்ள நிலையில், இதுபோன்ற சட்டங்களால் எங்களின் அடிப்படை வாழ்வாதாரம் மேலும் மேலும் பாதிக்கப்படும், என்று வேதனையுடன் தெரிவித்தனர்.