திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் பிரபல வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தில் பா.ஜ.க இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் (35) பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அந்த ஏ.டி.எம் மையத்தில் பொறியாளர் ஒருவர் ஏ.டி.எம் இயந்திரத்தினை சரி செய்து கொண்டிருந்தார். ஆனால், அதையும் மீறி அபிலேஷ் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் கார்டை மெஷினில் செலுத்தியுள்ளார். இதனால் அந்த பொறியாளர், மெஷின் சர்வீஸ் செய்வதாகவும், எனவே பணம் எடுக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து, அபிலேஷ் பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை சி.சி.டி.வி காட்சி வழியாக கண்ட வங்கி உதவி மேலாளர் பிரதீப் ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து, ஏ.டி.எம்மில் பணம் எடுக்க கூடாது என்று அபிலேஷிடம் கூறியுள்ளார்.
ஆனால், அபிலேஷ், வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர், பிரதீப்பை தகாத வார்த்தையால் பேசி அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதிலும் ஆத்திரம் அடங்காத அபிலேஷ், தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து பிரதீப்பை தலையில் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், அபிலேஷை தடுத்து வெளியே அனுப்பினர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மணவாள நகர் போலீசார், அபிலேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். வங்கி உதவி மேலாளரை செருப்பால் அடித்து தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.