நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்களும், அமமுகவுக்கு இரண்டு இடங்களும், தமமுகவுக்கு ஒரு இடமும், புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும், இமகமுவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் பாமகவிற்கு வழங்க பாஜக மறுப்பு தெரிவித்துள்ளதால், பாமக தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்கும் தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளை ஒதுக்குவதிலும் சிக்கல் நீடிப்பதால் ஜி.கே. வாசன் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது. தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை பாஜக ஒதுக்க மறுத்துவிட்டதால் ஓபிஎஸ் தரப்பும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவான நிலையில், எந்தெந்த தொகுதி என்பதை உறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது வரை தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே. வாசனுக்கும், ஓபிஎஸ் அணிக்கும் எத்தனை தொகுதிகள் என்பதே பாஜக கூட்டணியில் உறுதியாகவில்லை.
இந்த நிலையில், பாஜகவில் புதிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது திருச்சி சூர்யாவின் கருத்தும் அதற்குப் பதிலளித்த பாஜக நிர்வாகியின் கருத்தும். பாஜகவின் திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராம ஸ்ரீனிவாசனை திருச்சியில் களம் இறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். வெற்றியை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சி பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது' எனப் பதிவிட்டு இருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஸ்ரீ ராம ஸ்ரீனிவாசன், 'அரசியல் பணியாற்றுவோர் மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மண்ணிற்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் மண்ணுக்கான மைந்தன்' எனப் பதிவிட்டுள்ளார். இது பாஜகவில் மேலும் ஒரு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.