தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பா.ஜ.க தலைமைதான் முடிவு செய்யும் எனத் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். மேலும், வரும் தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது எனவும் பா.ஜ.க தலைமைதான் முடிவுசெய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், அரசு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், அரசு விழா மேடையிலேயே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. துணை முதல்வர், முதல்வர் என இருவரும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியை உறுதிப்படுத்திப் பேசியிருந்தனர். அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க தலைமை, யார் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கும் வரை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது எனக் கூறியிருந்தது. ஒரு மாத இழுவைக்குப் பிறகு அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் தற்பொழுதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தமிழக தலைவர் எல்.முருகன் பேசுகையில், யார் முதல்வர் வேட்பளார் என்பதையெல்லாம் எங்கள் தேசிய தலைமை முடிவு செய்யும். அவர்கள் எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், வரவேற்கிறோம். ஆனால் எங்களுடைய முடிவை தேசிய தலைமைதான் சொல்லும் என்றார். இந்த கருத்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முருகனின் இந்த கருத்துக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. எங்கள் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க ஏற்கவில்லையெனில் தமிழகத்தில் தனித்துத்தான் போட்டியிட வேண்டும். எங்கள் முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள்தான் எங்களோடு கூட்டணியில் இருக்கமுடியும் என அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா கூறியுள்ளார். அதேபோல் முதல்வர் வேட்பாளர் குறித்த முருகனின் கருத்து ஏற்கத்தக்கதல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.