நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
ராணிப்பேட்டையில் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பரப்புரையில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''பத்தாண்டுகளாக ஒரு லட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாய் மோடி கடன் வாங்கி இருக்கிறார். ஒவ்வொரு இந்திய குடிமக்கள் தலையிலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனை ஏற்றி இருக்கிறார். இந்த பணத்தை எல்லாம் யாருக்காக கொடுத்திருக்கிறார், என்ன திட்டம் தீட்டி இருக்கிறார் என்று பதில் சொல்லி ஆக வேண்டும்.
சிறு குறு தொழில்கள் நலிந்து இருக்கிறது. கச்சத்தீவு வரலாறு தெரியாத மோடி அவர்களே இந்த தேசத்தை பாதுகாப்பதற்காக கடல் எல்லையை விரிவுபடுத்துவதற்காக, இலங்கையில் உள்ள 6 லட்சம் தமிழர்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய திட்டம் நம்முடைய கடல் எல்லை விஸ்தரிப்பு. கடல் எல்லையை விரிவாக்கம் செய்தார் இந்திரா காந்தி. அந்த அடிப்படையில் தான் சேது சமுத்திர திட்டத்தை இன்று பேசிக் கொண்டிருக்கிறோம்.
உலகிலேயே அபூர்வ வகை சொத்துக்கள் நமது கடல் எல்லையில் இருக்கிறது இதுவெல்லாம் இந்த தேசத்தின் மீது பற்று கொண்டுள்ள இந்திரா காந்திக்கு தெரியும். தேசத்தை நேசிக்காத, சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக இருந்த, 40 ஆண்டுகளாக தேசிய கொடியையே ஏற்றாத பாஜகவிற்கு தெரியாது'' என்றார்.