திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.
கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு.
தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.
பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம்.
தீராத… pic.twitter.com/4IpZXjvMD9— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 27, 2024