தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், இன்று முதல் மூன்று நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டத்தின் பயன்களை குறித்து எடுத்துரைக்கிறார். இந்த சுற்றுப் பயணத்தில் இவருடன் மத்திய அமைச்சர் வி.கே.சிங் நாளை இணைகிறார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டத் திருத்ததை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் சில அமைப்புகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் தொடர்ப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டம் மூலம் விவசாயிகளுக்கு நன்மையே அதனை பா.ஜ.கவினர், விவசாயிகளை சந்தித்து எடுத்துரைக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை தெரிவித்திருந்தது. அதன்படி மற்ற மாநிலங்களில் அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் இதனை செய்துவருகின்றனர்.
தமிழகத்தில், எல்.முருகன் இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டங்களைக் குறித்து எடுத்துரைக்கிறார். மேலும் இவரது இந்தப் பயணத்தில் நாளைமுதல் மத்திய மத்திய தரைவழி போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.