Skip to main content

பேருந்துகளை நிறுத்திய பா.ஜ.க.வினர்; டி.எஸ்.பி.யிடம் வாக்குவாதம் செய்த அமர் பிரசாத்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

BJP stopped the buses; Amar Prasad argued with DSP

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில்  கடந்த 28 ஆம் தேதி அன்று இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தைத் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த தொடக்க  விழாவில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்தப் பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம், மண்டபம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நடைப்பயணத்தை மேற்கொண்ட அண்ணாமலை, நேற்று முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்னர், அண்ணாமலை முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள  தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதனால், காலை 9 மணிக்கு முன்னேரே பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை பகுதியில் கூடியிருந்தனர். மேலும், அந்தப் பகுதி,பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர், கமுதி - கடலாடி ஆகிய பிரதான சாலை என்பதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையில், அண்ணாமலை திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர், மரகத நடராஜர் ஆகிய கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காகச் சென்றிருந்தார். அங்கிருந்து, பாதயாத்திரை துவங்கும் முதுகுளத்தூர் பகுதிக்கு 11:50 மணி அளவில் வந்தார். அண்ணாமலை, அந்த இடத்திற்கு வரும் வரை அந்தப் பகுதிக்கு வந்த பேருந்துகளை பா.ஜ.க தொண்டர்கள் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பேருந்துகளில் இருந்த பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்கி வெயிலில் நடந்து செல்லத் துவங்கினர்.

 

இதையடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கமுதி டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுத்தனர். அப்போது, பா.ஜ.க தொண்டர்களுடன் பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி அந்த இடத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. மணிகண்டனுடன், பேருந்துகளை இயக்கக்கூடாது என்று அமர் பிரசாத் ரெட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என சொல்லப்படுகிறது. அவருடன் வந்த தொண்டர்களும் காவல்துறையினரிடம் ஆவேசப்பட்டனர்.

 

இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த பா.ஜ.க  மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், அமர்பிரசாத் ரெட்டியை அழைத்துச் சென்றார். பா.ஜ.க தொண்டர்களின் இந்தச் செயலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் பேருந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது.  இதனால், பேருந்துகளில் இருந்து கைக்குழந்தைகளுடன் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் சுடும் வெயிலில் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்