பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தனது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக வந்துள்ளார். திருச்செந்தூர் செல்லும் வழியில் நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனது 80- வது பிறந்த நாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தினேன். ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை பெறவும் பாகிஸ்தான் பிடியில் இருந்து காஷ்மீரை முழுமையாக கைப்பற்றவும் பூஜைகள் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து திருச்செந்தர் சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்ய செல்கிறேன். நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையை மாற்ற மக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படவேண்டும், நரசிம்மராவ், குஜ்ரால், பிரதமராக இருந்த காலத்தில் செய்ததை போல் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வதால் மட்டுமே பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுத்த தவறான முடிவுகள் பொருளாதார சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது. திகார் ஜெயிலுக்கு செல்ல சிதம்பரம் பயப்படுகிறார். வீட்டுக்காவலில் வைக்க கெஞ்சுகிறார்.
அவர் மீது ஏழு ஊழல் வழக்குகள் உள்ளது. அவரது ஊழல்களுக்கு 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். அவரது மகனும் ஊழலில் ஈடுபட்டுள்ளார். சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் முதல்வர்கள் ஜெயிலுக்கு போகும் நிலை ஏற்படும்.
திகார் ஜெயிலில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தும் நிலை ஏற்படும். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டுமானால், எதிர்வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்து போட்டியிட வேண்டும். ஐந்து தொகுதிகளுக்காக மற்ற கட்சிகளிடம் யாசகம் பெறும் நிலையை மாற்றவேண்டும். அப்போது தான் கட்சி வளரும் என்று தெரிவித்தார்.