Skip to main content

சி.பி.சி.ஐ.டி.க்கு எதிராக பாஜக மனு; விசாரணைக்கு ஏற்கப்படுமா?

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
BJP petition against CBCID

தமிழக பாஜகவின் நெல்லை வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் நயினார் நாகேந்திரன். தேர்தல் சமயத்தில், ஓட்டுகளைப் பெற, வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் இருந்து நெல்லைக்கு 4 கோடி ரூபாயை நயினாரின் ஆட்கள் கடத்த முயற்சித்த நிலையில், தகவல் அறிந்து அவர்களை தாம்பரம் ரயில்வே நிலையத்தில் மடக்கிப் பிடித்து பணத்தை கைப்பற்றியதுடன் அவர்களை கைதும் செய்தது பறக்கும் படை போலீஸ். இந்த வழக்கு ஒரு கட்டத்தில் சி.பி.சி.ஐ.டி.போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

வழக்கை எடுத்துக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 1 மாதமாக பல்வேறு ஆதாரங்களைத் திரட்டியிருக்கின்றனர். அதனடிப்படையில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தென்காசி தொகுதி பொறுப்பாளர் சிறிதர் யாதவ் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியது சி.பி.சி.ஐ.டி.போலீஸ். மேலும், பல இடங்களில் ரெய்டும் நடத்தியது.

இதற்கிடையே, தங்களுக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. அனுப்பிய சம்மனுக்கு பாஜக பிரமுகர்கள் ஆஜராகாமல்  இருந்து வருகின்றனர். வட மாநிலங்களில் தேர்தல் நடந்து வருவதால் பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என காரணம் சொல்லி சம்மனுக்கு ஆஜராகாமல் தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. எதிராக ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார் கேசவ விநாயகம். அதாவது, 4 கோடி கடத்தல் விவகாரத்தில் போடப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை க்வாஸ் ( நீக்குதல் ) செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் 21-ந் தேதி கேசவ விநாயகம் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று (22/5/24) விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், சம்பந்தப்பட்ட வழக்கில் யார் மீது எஃப்.ஐ.ஆர். இருக்கிறதோ அவர்கள் தரப்பில்தான் குவாஸ் பெட்டிசன் தாக்கல் செய்யமுடியும். ஆனால், இந்த வழக்கில்  கேசவவிநாயகத்தின் மீது எஃப்.ஐ.ஆர். இல்லை. அப்படியிருக்கும் போது இவர் எப்படி க்வாஸ் பெட்டிசன் போட முடியும் ? என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தரப்பில் விவாதிக்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்