நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இன்று (11.02.2024) மாலை சென்னை வருகிறார். இதற்காக இன்று பிற்பகல் 3 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். மாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகை தரும் ஜெ.பி. நட்டாவை தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்கின்றனர். சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் பா.ஜ.க. மையக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஜெ.பி. நட்டா தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.
மேலும் இந்த பயணத்தின் போது கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். அதன்படி தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் இன்று இரவு 09.03 மணியளவில் ஜெ.பி. நட்டா தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார்.