செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போலப் பெரியார் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சிறப்புச் செய்து வருகின்றனர். பல இடங்களில் மரக் கன்றுகளும் நடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு கூடிய பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்டச் செயலாளர் போர்வாள் கோவிந்தராஜன், ஓ.பி.சி. பிரிவு மாவட்டச் செயலாளர் முத்து ராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜா, ராணுவ அணி மாவட்டச் செயலாளர் காமராஜ் ஆகியோருடன் மேலும் சில பா.ஜ.க.வினர், பாஜக கொடியுடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார்கள்.
இது பற்றி நாம் கேட்ட போது, “அய்யயோ நாங்கள் பெரியார் பிறந்த நாள் கொண்டாடவில்லை. பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை கொண்டாடித் தான் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுக்கிறோம்” என்றனர். அந்த வழியாகச் சென்றவர்களோ, ‘இன்று மோடிக்குப் பிறந்த நாள் கொண்டாடும் இவர்களில் சிலர் முன்பு திராவிட அரசியலிலிருந்தவர்கள் என்பதால் பெரியார் பாசம் போகவில்லை’ என்றனர்.