திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலபட்டி சுங்கச் சாவடியில் பணியிலிருந்த ஊழியர்களிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தினை செவ்வாய்க்கிழமை (14.12.2021) முற்றுகையிட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறையை அடுத்த பொன்னம்பலபட்டி சுங்கச் சாவடியில் திங்கட்கிழமை மாலை திருச்சி பாஜக பிரமுகர் தனது காரில் சுங்கச் சாவடியைக் கடந்து சென்றபோது, ஃபாஸ்ட் டேக் பகுதியில் வந்ததாகவும், அப்போது தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக அங்கிருந்த பணியாளர்கள் காரை மாற்றுப் பாதையில் திரும்பி வரக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதில் பாஜக நிர்வாகிகளுக்கும், சுங்கச் சாவடி ஊழியர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அருகே உள்ள பகுதியிலிருந்து வந்தடைந்த பாஜக நிர்வாகிகள் சிலரும் சேர்ந்துகொண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாஜக நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டு சுங்கச் சாவடி ஊழியர்களைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் காயமடைந்த ஊழியர்கள் மணப்பாறையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பணியிலிருந்த ஊழியர்களிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுங்கச்சாவடி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல், பாஜக சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்களிடம், புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.