சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர் பாஜகவில் எஸ்சி-எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு தனது பி.எஸ்.ஓ பாலமுருகனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்ற பாலசந்திரன் அங்கு நண்பர் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். பாலசந்தர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பி.எஸ்.ஓ பாலமுருகன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ அருந்த சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதனைப் பார்த்து ஓடிவந்த பி.எஸ்.ஓ உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாலசந்தர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பாதுகாப்புப் பணியின் பொழுது கவனக்குறைவாக இருந்த காரணத்தால் பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாலசந்தரை பாதுகாக்கும் பணி கொடுக்கப்பட்ட போதிலும் அதை தவிர்த்துவிட்டு பாலசந்தர் சென்றதால் கொலை நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பாலசந்தர் மீது 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஜாமீனிலிருந்த பாலசந்தரை தொழில் போட்டியால் பிரதீப் என்பவரும் ரவுடிகளும் சேர்ந்து வெட்டிக்கொன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.