அதிமுகவின் எடப்பாடி தரப்பு, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தேதி அறிவித்துள்ள நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையனிடம், ‘அதிமுகவில் வேறு யாரேனும் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறதா’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''வாய்ப்பு இருக்கிறது. வேட்பு மனுவை மற்றவர்களும் தாக்கல் செய்ய உரிமை உண்டு. ஓபிஎஸ் தொடுக்கும் வழக்கு செல்லாத வழக்காக இருக்கும். செல்லாக்காசு என கருதப்படுபவர்கள் வழக்கு தொடர்வதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
இன்றைய நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது. அண்ணாமலை, அதிமுக கூட்டணி வேண்டாம் என சொன்னதற்கு ஆதாரம் வேண்டும். அவர் சொன்னதாக அவரே ஒத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உண்மை தெரிய வரும். திராவிட கட்சிகளுக்கு கொள்கை வேறு பாஜகவின் கொள்கை வேறு. பாஜக வட நாட்டவர்களின் கொள்கைகளை, ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளை ஊக்குவிக்கின்ற கட்சி, ஹிந்தி வெறியர்களை ஊக்குவிக்கின்ற கொள்கை கொண்டவர்கள். திராவிட கட்சிகள் வளர்ச்சியில், மொழியில் ஈடுபாடு உள்ள கொள்கை கொண்டவர்கள். இன்றைய நிலையில் பாஜகவுடன் நல்லுறவு இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது அப்போதுதான் தெரியும்'' என்றார்.