போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேற்று கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி, ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை திரைப்படங்களை எடுப்பதில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை இறக்கி விட்ட பாஜக தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏவி விட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவியேற்றது முதல் தற்பொழுது வரை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருள் வழக்கு விசாரணை முடிவடையும் முன்பே டெல்லியில் என்சிபி அதிகாரி ஒருவர் பேட்டியளிக்கிறார்.
என்சிபி அதிகாரியின் பேட்டியை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது. ஒன்றிய அரசின் புலன் விசாரணை அமைப்புகள் பாஜகவை எப்படியாவது தாங்கி பிடிக்கலாம் என நினைக்கின்றன. ஜாபர் சாதிக் தேடப்படும் குற்றவாளியாக பிப்ரவரி 16ஆம் தேதி அறிவித்த என்சிபி, 21ஆம் தேதி திரைப்பட விழாவில் பங்கேற்றபோது கைது செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. ஜாபர் சாதிக் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் திமுகவிற்கு களங்கம் கற்பிக்க முயற்சி நடைபெறுகிறது.
ஜாபர் சாதிக் மீது 2013ஆம் ஆண்டே அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்பொழுது பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஜாபர் சாதிக்கிற்காக ஆஜராகி உள்ளார். ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் இடம் டெல்லி தானே தவிர தமிழ்நாடு அல்ல. திமுக அரசுக்கு எதிராக பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்கவே போதைப்பொருள் மாநிலம் போல் சித்தரிக்க பாஜக முயற்சிக்கிறது.
நாட்டிலேயே அதிகமாக போதைப்பொருள் கடத்துவது பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தான். ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதைப்பொருள் தொடர்பாக புகார் எழுந்த உடனேயே ஜாபர் சாதிக்கை உடனடியாக திமுகவிலிருந்து நீக்கி விட்டோம். பாஜக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது''என்றார்.