விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் இது குறித்த கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்த எச்.ராஜா, ''யாரோ வெற்றிமாறனாம்... வெற்றி மாறனோ, தோல்வி மாறனோ தெரியவில்லை. ராஜராஜ சோழனை இந்துவாக மாத்த ஞானஸ்தானம் பண்ணிட்டோமா. எனக்கு அவ்வளவு சரித்திர அறிவில்லை. அவர் பெயரை வெற்றிமாறன் அப்படின்னு வைத்திருக்கிறார். அவரே ராஜராஜ சோழன் கட்டிய இரண்டு சர்ச், ரெண்டு மாஸ்க் எங்க இருக்கிறது என்று சொல்லிவிட்டால் போதும். ராஜராஜ சோழன் சிவனுடைய பக்தன். எந்த அளவுக்கு என்றால் தன்னை சிவபாத சேகரன் என்று அழைத்துக் கொண்ட மாமன்னன் ராஜராஜ சோழன். அவர் ஹிந்து இல்லையா'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ''அவர் இந்து கிடையாது. அப்பொழுது சைவம் வைணவம் என்ற மதங்கள் தான் இருந்தது. அதனால் அவர் விரும்பிய சைவ கடவுளான சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற கருத்தை அவர்கள் தரப்பு முன் வைக்கிறார்கள்'' என்று கேள்வி எழுப்ப, வழக்கம்போல் ஆத்திரமடைந்த எச்.ராஜா, ''நீங்கள் தவறான ஆர்க்யூமென்டை என்னிடம் வைக்க கூடாது'' என்றார்.
அதற்கு செய்தியாளர், ''நான் வைக்கவில்லை. திருமாவளவன், ஜோதிமணி எம்பி ஆகியோர் வைக்கின்றனர்'' என்றார். அதற்கு எச்.ராஜா, ''தேச விரோதிகள், முட்டாள்கள் பேசுகிறார் என்றால் அதை நாம் பேசக்கூடாது. வேதம் வேற தமிழ் வேற இல்லை. வேதம் வேற சைவம் வேற இல்லை. அதனால் ராஜராஜ சோழன் இந்து தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் இந்து தான். இந்து ஒரு அனாதி மதம். அதற்கு துவக்கமே கிடையாது. அனாதி என்றால் அனாதை அல்ல ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றியதாக பேசுபவர்கள்தான் அனாதைகள்'' என்றார்.