திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு எழுதிய உரிமைக்குரல், பாதை மாறா பயணம் உள்ளிட்ட 4 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மூத்த பத்திரிக்கையாளர் இந்து என். ராம், அமைச்சர் கே.என்.நேரு எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “டி.ஆர். பாலுவைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஈடுபாட்டுடன் செயல்படுபவர் என சொல்லலாம். டி.ஆர். பாலு கொள்கைப் பிடிப்புடன் இயங்கி வருபவர். மத்திய அமைச்சராக இருந்தபோது ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தவர். பேரறிஞர் அண்ணாவின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டம் கலைஞர் வற்புறுத்தலால் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் அடுத்தடுத்து வந்த அரசியல் சூழ்ச்சிகளால் முடக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்தியாவின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாக இருந்திருக்கும்.
தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல் இறுதியில் ஒரு கோயிலை பாஜக கட்டியுள்ளது. மக்களை திசை திருப்புவதற்காகவே கட்டி முடிக்கப்படாத கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத மத்திய பாஜக அரசு இறுதி காலத்தில் ராமர் கோயிலை கட்டி மக்களை திசை திருப்பப் பார்க்கிறது. இத்தகைய செயலுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாழ்த்திய, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கலைஞர் பேசியது, அரங்கத்தில் இருந்தவர்களின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.