பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி
திருவள்ளூர் மாவட்டத்தில் பா.ஜ.க. பிரமுகர் அரங்கேற்றிய கபட நாடகத்தை பொதுமக்களே புரிந்துகொள்வீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம் என்ற நபர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. எஸ்.சி. பிரிவு செயலாளராக உள்ளவர். இவர் நேற்று முன்தினம் (21 ஆம் தேதி) அதிகாலை, தன் வீட்டுக்குள்ளே மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதாகவும், அதனால் வீட்டிலிருந்த சோபா தீப்பிடித்து எரிந்ததாகவும் காவல்துறையில் புகார் கொடுத்ததையடுத்து, திருவேற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து, அது அவரே நடத்திய நாடகம் - அப்படி ஏதும் நடக்காமலேயே அவர் செய்தது என்று கண்டறிந்து, நேற்று (22.9.2017) மாலை பரமானந்தத்தினைக் கைது செய்துள்ளனர்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று ஒரு பழமொழி நம் நாட்டில் உண்டு. ஆனால், இவரின் புளுகோ ஒரு நாள்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை! தனது தோல்வியைத் திசை திருப்புவதற்காக...
அவரிடம் பதிவு செய்த வாக்குமூலத்தில் சில உண்மைகளை காவல்துறையினர் அம்பலப்படுத்தியுள்ளனர்.
பரமானந்தத்திற்குச் சொந்தமான நிலத்தருகே பொதுமக்கள், கடந்த ஆண்டு நடந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை பந்தல் அமைத்தனர். இதற்கு எதிராக பரமானந்தம் மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர்கள் பூவிருந்தவல்லி மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் விளைவாக பொதுமக்கள் யாக சாலைக்காக அமைக்கப்பட்ட பந்தலை அகற்றிவிட்டு, அதே இடத்தில் கொட்டகை அமைத்தனர். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த பரமானந்தம், தனது தோல்வியைத் திசை திருப்புவதற்காக, தன் வீட்டுக்குள்ளே தானே தீயை வைத்துவிட்டு, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது! (தி இந்து தமிழ், 23.9.2017, பக்கம் 4)
இது முதல்முறை அரங்கேற்றம் அல்ல
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் செய்யும் இத்தகைய பித்தலாட்ட நாடகம் இது முதல்முறை அரங்கேற்றம் அல்ல. இதற்குமுன் பல இடங்களிலும் இதுபோன்ற பொய்ப் புகார்கள் காவல்துறையினரிடம் தாக்கல் செய்யப்பட்டு, பிறகு பொய் என்று கண்டறியப்பட்டுள்ள சம்பவங்கள் பற்பல ஊர்களில் நடந்துள்ளன.
திண்டுக்கல்லில் ஒரு பா.ஜ.க. சேர்ந்தவரின் வீட்டு ஜன்னலை உடைத்து தாக்க வந்தனர் என்று கொடுக்கப்பட்ட புகாரும் கற்பனை - திட்டமிட்ட நாடகம் என்று காவல்துறை கண்டறிந்து - சில மாதங்களுக்குமுன் இந்நிகழ்வு - கற்பனை, ஜோடிப்புகள் என்பது அம்பலமாகியது!
கோவை வடவள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு ஒரு பொய்ப்புகாரை காவல்துறையினர் விரைந்து, விசாரித்து இதன் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தனது வீட்டில் குண்டு வீசப்பட்டது என்று காவிக் கட்சிப் பிரமுகர் கூறிய புகாரில் உண்மை இல்லை என்று கண்டறியப்பட்டது.
ஈரோட்டை அடுத்த சதுமுகையில் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை போட்டதும் இந்து முன்னணியினர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
குறுக்குவழியில் விளம்பரம் தேடுவது!
தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அவரது உடலைக்கூட வாங்கமாட்டோம் என்று சண்டித்தனம் செய்து, பிறகு ஒரு இஸ்லாமிய இளைஞர்மீது கொலைக் குற்றம் சுமத்தியதால், ஊரில் பதற்றமான சூழ்நிலை உருவானது. பிறகு தமிழகக் காவல்துறை சில மாதங்களுக்குப் பிறகு இந்த உண்மைகளை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தியது!
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை வளர்த்தெடுக்க இப்படி ஒரு குறுக்குவழி, விளம்பரம் தேடுவது ஒருபுறம் -
திடீர் தேசப் பக்த திலகங்களாக
மற்றொரு புறம், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பழைய கிரிமினல் பேர்வழிகளுக்கும், பொறுப்புக்கு ஆட்கள் சிக்காத நிலையில், இவர்கள் திடீரென்று காவி உடை அணிந்து, காக்கிகளை மிரட்டி, தாங்கள் ஏதோ மிகப்பெரிய பொது சேவையாளர்கள், திடீர் தேசப் பக்த திலகங்களாக வேடமணிந்து உலா வருகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு இது புரிய வைக்கப்படல் வேண்டும்.
எந்த அரசியல் கட்சியானாலும், அவர்களது பூர்வோத்திரம் அறிந்தே தங்கள் அமைப்பில் சேர்த்தால், புது உறுப்பினர்களால் பொது ஒழுக்கம் காப்பாற்றப்பட பெரிதும் உதவிடும். கட்சியை வளர்க்கும் கண்ணோட்டம் தேவைதான் - ஆனால், பொது ஒழுக்கம் அதைவிட முக்கியம் அல்லவா!