
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததைத் தொடர்ந்து மாநில அரசுகளும் தங்கள் மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை அம்மாநில அரசுகள் குறைத்தன. தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் திமுக வெற்றி பெற்றால் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 4 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தேர்தலில் வெற்றிபெற்ற பின் பெட்ரோல் விலை மட்டும் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு வாட் வரியைக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக சார்பில் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அரியலூர் மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக வர்த்தகர் அணி சார்பில் மாவட்டத் தலைவர் சுரேஷ், செயலாளர் பவன்குமார் முன்னிலையில் பாஜக கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்டச் செயலாளர் கோகுல் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாவட்டத் தலைவர் அய்யப்பன், “தமிழக அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். அதன்மூலம் நுகர்வோருக்கு பெட்ரோல் டீசல் விலை குறைவாக கிடைக்கும். மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதை உடனடியாகசெய்ய வேண்டும். செய்ய தவறினால் எங்கள் கட்சியினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கும் தயாராக இருப்போம்” என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து வாலாஜா நகரம் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ், அரியலூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் ஜாதி மத மோதலை தூண்டும் வகையிலும் வன்முறையை கையாண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் அய்யப்பன் பேசியதாக கூறி அவர் மீது புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் அரியலூர் போலீஸார், ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் அய்யப்பன் உட்பட 55 பேர்கள் மீது வழக்குப் பதிவு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்துள்ளனர்.