திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் தமிழகத்தின் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சி.பி.எம்.கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், மாநில துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி தலைமையில் திமுக.வினர் தேர்தல் பணியை ஆற்றி வருகின்றனர்.
ஆத்தூர் தொகுதியில் வீடு தவறாமல் திமுக.வினர் பிரச்சாரம் செய்து திமுக. கூட்டணியின் வேட்பாளரான சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சின்னாளபட்டி பேரூராட்சி கோட்டை மந்தை மைதானத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சி.பி.எம். கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.
அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மத்தியில் ஐ.லியோனி பேசும் போது, “திராவிட மாடல் ஆட்சி நாயகன் தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் திண்டுக்கல் மாவட்டத்தை வழிநடத்தும் அண்ணன் ஐ.பெரியசாமி மற்றும் தம்பி ஐ.பி.செந்தில்குமார் அவர்களின் ஆதரவுடன் இங்கு போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார். தமிழகத்திற்கு தேர்தலின் போது மட்டும் வரும் பாரத பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு எந்த ஒரு நலத்திட்டத்தையும் முறையாக வழங்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களின் நலன்கருதி குறிப்பாக பெண்களின் நலன் கருதி கட்டணமில்லாமல் பெண்களுக்கு பேருந்து வசதி, மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் போன்ற சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தியதால் இன்று தமிழகத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கின்றன. இதில் ஒருபடி மேலே போய் வெளிநாடான கனடாவில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இது முத்தமிழ் அறிஞர் வழியில் வந்த தலைவர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளது. தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளம் வந்தபோது தமிழகத்தைத் திரும்பிப் பார்க்காத பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் வந்தவுடன் தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார். காரணம் தோல்வி பயம் வந்துவிட்டது. இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல் மூலம் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் யாரை கை நீட்டுகிறாரோ அவரே பாரத பிரதமர்” என்றார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். பேரறிஞர் அண்ணாவில் தொடங்கி முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை கைத்தறி நெசவாளர்களையும், அவர்கள் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றி வருகின்றனர். சின்னாளபட்டி கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். சுதந்திரம் பெற்ற பின்பு பா.ஜ.க. ஆட்சிவரை கைத்தறி நூலுக்கு வரி விதித்தது கிடையாது. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கைத்தறி நூலுக்கு வரி விதித்து கைத்தறி நெசவாளர்களையும், அவர்கள் வாழ்வாதாரத்தையும் அழித்து வருகிறது. நீங்கள் தேர்தல் நாளன்று திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சி.பி.எம். கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்படுவதோடு. கைத்தறி நெசவாளர்கள் வாழ்க்கையில் ஒளிவீச தொடங்கிவிடும். வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று கூறினார்.