நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் வீதிமீறல்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கத்தில் வீட்டின் உரிமையாளர் பெயரில் போலி ஆவணம் சமர்ப்பித்து பாஜக சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவரை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவரது கைதை தொடர்ந்து பாஜக மண்டல தலைவர் மருதுபாண்டி வீட்டில் போலீசார் இன்று (09.04.2024) காலை 07.00 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.