2021 ஜூலை 8ம் தேதி பா.ஜ.க. தமிழ்நாட்டு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அந்தப் பதவியில் செயல்பட ஆரம்பித்த அவர், அரசியலில் பல தடாலடிகளை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க சமீபத்தில் அவர் ‘என் மண் என் மக்கள்’ எனும் நடைப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்க வேண்டும் என இவர் கூட்டணியில் இருந்த பா.ஜ.க.வின் தோழமை கட்சியான அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரை விமர்சித்ததும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை விமர்சித்ததும் தமிழ்நாடு அரசியலில் பேசுப்பொருளானது. அதேபோல், என்.டி.ஏ. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியான அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவுக்கும் அந்தப் பேச்சுகள் காரணமாக அமைந்தன.
தற்போது இவர் தனது மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி பங்காரு அடிகளார் இயற்கை ஏய்தினார். அதன் காரணமாக அண்ணாமலை தனது நடைப்பயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பனையூரில் அண்ணாமலையின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் வெளியே பா.ஜ.க.வினர் 100 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நட்டு அதில் இன்று(21ம் தேதி) பா.ஜ.க.வின் கொடியை ஏற்றுவதற்கு திட்டமிட்டிருந்தனர். இதற்காக அண்ணாமலையின் வீட்டின் வெளியே கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் பலர், தங்களது எதிர்ப்பை தெரிவித்து நேற்று இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பா.ஜ.க.வினர் அங்கு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து இரு தரப்பிடமும் சமாதானம் பேசினர். ஆனால், அப்பகுதி மக்கள், அனுமதியின்றி 100 கொடிக் கம்பம் நடப்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தக் கொடிக் கம்பத்தை அகற்ற ஜெ.சி.பி. எந்திரத்தை அங்கு வரவழைத்தனர். இதற்குள் தாம்பரம் துணை ஆணையர் பவன் குமார் அங்கு வந்தார். அதற்குள் இந்த விவகாரம் அறிந்து அங்கு ஏராளமான பா.ஜ.கவினர் குவிந்தனர். பிறகு அவர்கள் கொடிக் கம்பத்தை அகற்ற வந்த ஜெ.சி.பி. எந்திரத்தை கடுமையாக தாக்கினர். அதனை போலீஸார் தடுக்க முயன்றபோது, பா.ஜ.க.வினருக்கும் போலீஸாருக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக சமூக ஊடக பிரிவு மாநிலச் செயலாளர் விவின் பாஸ்கருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அவரை மீட்ட பா.ஜ.க.வினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
போலீஸாரின் எச்சரிக்கையை மீறி, பா.ஜ.க.வினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு குவிந்திருந்த 200க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீஸார் கைது செய்து அருகில் இருந்த மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அடைத்தனர். பிறகு அனுமதியின்றி அங்கு வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை ஜெ.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் பத்திரமாக அகற்றினர்.
சம்பவ இடத்திற்கு வந்த பா.ஜ.க.வின் மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன், “கொடியே ஏற்றாத கொடி கம்பத்தை எடுப்போம் என்று ஏறத்தாழ 300 காவலர்கள், உயர் அதிகாரிகள், இங்கு ஏதோ பெரிய போர்க்களம் ஏற்படுவதைப் போல் ஒரு காட்சியை உருவாக்கி இங்கு நின்று கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு பா.ஜ.க.வின் வளர்ச்சியை பொறுக்காத தி.மு.க. அரசின் செயலை கண்டிக்கிறோம். இதனை இதோடு விடப்போவதில்லை. அனுமதியில்லாமல் தமிழ்நாடு முழுவதும் லட்சக் கணக்கான கொடிக் கம்பங்கள் இருக்கிறது. தமிழ்நாட்டில் நினைத்தால் கொடி ஏற்றுவது சாதாரண நிகழ்வு. தமிழ்நாட்டில் அனுமதியின்றி இருக்கும் அனைத்து கொடிக் கம்பங்களையும் எடுங்கள். இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்” என்றார்.
இரவு 10 மணிக்கு துவங்கிய இந்த விவகாரம் அதிகாலை 2 மணி அளவில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.