திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், ''யார் மக்களுக்கான பணிகளை செய்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம். குறைகளை கேட்டு சொல்லுங்கள், அதை சரி செய்ய பாருங்கள். தேர்தலில் யார் எங்கே நிற்பார்கள் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் தான் தெரியும். யாருக்கு ஆதரவளிப்பது என்று மக்களுக்கு தெரியும். இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமல்ல மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட தலைவர்கள் பற்றியும் கூட பாஜக சிந்திக்கிறது. அதுதான் மற்ற கட்சிகளுக்கும் பாஜகவிற்கும் இருக்கின்ற வித்தியாசம். ஒரு மாவட்டமாக இருக்கட்டும், ஒரு மாநிலமாக இருக்கட்டும், அடுத்து வரக்கூடிய 10 வருடம் யார், 20 வருடம் யார் என்பது குறித்த தெளிவான திட்டமிடல் எங்களிடம் இருக்கிறது.
அடுத்தடுத்து ஒரே குடும்பத்தை சாராமல் ஒரு தனி நபரை சாராமல் இந்த கட்சியும் இயக்கமும் இவ்வளவு வெற்றி பெற்றுள்ளது. உள்ளூர் தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள், அடுத்த தலைமுறைக்கான தலைவர்கள் உருவாக்கின்ற பணியை நாங்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஒரு குற்றவாளியையும் அந்த சமூகம் பாதுகாக்கும் என்றால் அந்த குற்றத்திற்கு விடிவே கிடையாது. தேச விரோத செயல்கள், மனித குலத்திற்கு எதிரான செயல்களை செய்பவர்களை தயவு செய்து மதத்தினுடைய பார்வை கொண்டு பார்க்க வேண்டாம். இதைத்தான் நான் சிறுபான்மை மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் என்றால் அவர்களை குற்றவாளிகளாக பாருங்கள். தயவு செய்து அவர்களுக்கு மத சாயம் கொடுத்து சமூகத்தின் அமைதியை குழைப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது. கோவையில் கூட சிலிண்டர் குண்டு வெடிப்பு என்று நீங்கள் சொல்லக்கூடிய ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பது நடைபெற்றது. அதற்கு பின்பாக கோவையில் இருக்கின்ற சிறுபான்மை மக்களை ஒரு விதத்தில் பாராட்டுகிறேன். உடனடியாக இந்த மாதிரியான நபர்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தீர்மானித்தார்கள். இதுபோன்று சமுதாய மக்கள் யார் குற்றம் செய்கிறார்களோ, யார் தீவிரவாத செயல்கள் ஈடுபடுகிறார்களோ அவர்களை நீங்களும் முற்றிலுமாக ஒதுக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் அமைதியான சூழல் உருவாகும்'' என்றார்.