'ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்தவர் இயக்குனர் சந்தோஷ். அவருடைய அடுத்த படமும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 'இரண்டாம் குத்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்த படம் வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு கடும் கண்டனத்தை இயக்குனர் பாரதிராஜா பதிவு செய்துள்ளார். அதேபோல் அரசியல் கட்சித் தலைவர்களும் இதுபோன்று கண்ணியக் குறைவான காட்சிகள் இடம் பெறும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கோபிநாத் என்பவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் இப்படத்தின் டீசர், போஸ்டர் என அனைத்தும் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆசிபா முதல் ஹத்ராஸ் சம்பவம் வரை நடந்தேறிய பாலியல் குற்றங்களால் சமூகத்தில் பெண்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு இருக்கிறது என்கிற கேள்வியே தற்பொழுது கேள்விக்குறியாகவே இருக்கும் நிலையில், இதுபோன்ற சமூக சீரழிவை ஏற்படுத்துகின்ற, மோசமான வசனங்களை கொண்ட திரைப்படங்கள் மேலும் பாதுகாப்பற்ற நிலையை ஊக்குவிப்பதையே மேற்கொள்ளும் என்ற கருத்து மக்களிடம் மிகச் சாதாரணமாகவே எழுந்து விட்டது. இதனால் அனைத்து தரப்பில் இருந்தும் இந்த படத்திற்கு வலுவான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
சில இடங்களில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், தொடர்ந்து அவர் எடுத்துள்ள படங்கள் அனைத்தும் இதே மாதிரியான இரட்டை அர்த்த வசனங்கள், மோசமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் 'பிட்டு பட' இயக்குனர் என்றே அடையாளம் காணப்படுகிறார். இந்நிலையில் பிட்டு பட இயக்குனரான சந்தோஷ் கண்டன குரல்களுக்கிடையே பாதுகாப்பிற்காக பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்பொழுது யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் தான் தமிழக பா.ஜ.க இருக்கிறது. அண்மையில் ரவுடி ஒருவர் கூட பா.ஜ.கவில் இணைய வந்திருந்த நேரத்தில் போலீஸ் வேனை பார்த்ததும் தப்பியோடிய சம்பவம் கூட நிகழ்ந்திருக்கிறது. இந்நிலையில் 'பிட்டு பட' இயக்குனர் சந்தோஷ் பா.ஜ.கவில் இணைய பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.