
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உணவு மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நஜூமைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து தலைமையேற்றுப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “கலைஞர் ஆட்சிக் காலத்தில் இத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை இத்துறையின் மூலம் தமிழக மக்களுக்கு வழங்கியிருந்தோம். இந்தத் துறையில் இரண்டு வருடங்களுக்கு மேல் ஒருவர் அமைச்சராக நீடிக்காத நிலை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. ஏனென்றால், பொதுமக்களின் உணவுப் பற்றாக்குறையை சரி செய்வதற்கான கடமையும் அதிகம் இருந்தது. இது கொஞ்சம் கடினமான துறைதான் என்பதால் பலர் இத்துறையில் தொடர்ந்து நீடிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது பொறுப்பேற்றிருக்க கூடிய அமைச்சர் மிகுந்த அனுபவசாலியானவர். தற்போது அவர் சிறப்பாக இந்த உணவுத் துறையை வழிநடத்திவருகிறார்.
1996க்குப் பிறகுதான் அனைத்து குடும்ப அட்டைகளும் கம்ப்யூட்டர் அட்டைகளாக இணையதளம் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. தற்போது இந்தத் துறை இணைய வழிகளோடு இணைக்கப்பட்டு பலமடங்கு மேம்பாடு அடைந்துள்ளது. தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கங்களில் 1,500 சங்கங்கள் மட்டுமே தன்னிறைவு அடைந்துள்ளன. பொது மக்களுக்கான மிக முக்கியத் துறையான இந்த உணவுப் பொருள் வழங்கல் துறை என்பது ஒவ்வொரு மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக்கூடியது. எனவே அவற்றை சரியாக செய்யவும் அரசிடமிருந்து அவற்றைப் பெற்று முறையாக தொடர்ந்து கொடுக்க வேண்டிய கடமை அதிகாரிகளின் கையில் உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “உணவுப் பொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடையாமல் இருக்க கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிக அளவில் கடினப்பட்டு அதைப் பாதுகாத்துவந்த நிலை மாறி, இன்று ஜெர்மன் டெக்னாலஜியைக் கொண்டு உணவுப் பொருட்களைப் பாதுகாக்க முயற்சி செய்து தமிழகம் நல்ல முன்னேற்றப் பாதையில் வளர்ந்துவருகிறது.
எனவே உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல், மழையில் நனையாமல், சேதமடையாமல் பொதுமக்களுக்கும் சரியான முறையில் பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலம் கொண்டு சேர்க்க தற்போதைய புதிய தொழில்நுட்பமுறை கைகொடுக்கிறது” என்றும் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்டம் வாரியாக அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய செயல் திட்டங்கள் குறித்தும் இதுவரை விநியோகிக்கப்பட்டிருக்கக்கூடிய மளிகைப் பொருட்கள், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவற்றின் நிலைப்பாடு குறித்தும் இருப்பு குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.