மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கடைகாரர்கள் சங்கத்தின் தலைவர் ராஜூநாகுலு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் "எங்கள் சங்கத்தில் 115 உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் மீனாட்சியம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம், பூஜை பொருட்கள், செயற்கை நகைகள், இந்து மத புத்தகங்கள், பூ விற்பனை செய்கிறோம்.
கடந்த பிப்ரவரி 2-ம் தேதி இரவு 10.20 மணிக்கு கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் எரிந்து சாம்பலானது. வியாபாரிகள் விரைந்து செயல்பட்டதால் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. மின் கசிவு தான் விபத்துக்கு காரணம். விபத்து நடைபெற்ற போது மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து வீரவசந்தராயர் மண்டபத்திலிருந்த 23 கடைகள் காலி செய்யப்பட்டன. 3 கடைகளைத் தவிர பிற கடைகளுக்கு இந்த மாதத்திற்கான வாடகை செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மன் சந்ததி பகுதியிலுள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு மாற்றிடமாக அருகில் வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வரும் 83 செண்ட் அளவில் உள்ள பழைய காய்கறி சந்தை பகுதியில் மாற்றிடம் வழங்க கோரி மதுரை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஆகவே, வீரவசந்தராயர் மண்டபத்திலிருந்து காலி செய்யப்பட்ட மற்றும் அம்மன் சந்நிதியில் மூடப்பட்டுள்ள கடைகளுக்கு மாற்றிடமாக குன்னத்தூர் சத்திரம் பகுதியில் உள்ள வணிக வளாகத்திலோ, பழைய காய்கறி சந்தை பகுதியிலோ மாற்றிடம் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், இது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.