அண்மைக்காலமாகப் பொதுவெளியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரமானது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். போலீசார் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்வர். சமீபமாக இதுபோன்று சம்பவங்கள் பெரிய அளவில் நிகழாத வண்ணம் இருந்த நிலையில், விழுப்புரத்தில் இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் வெங்கடேசன். லாரி டிரைவரான வெங்கடேசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மாரியம்மன் கோவில் அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. அது வைரலானதைத் தொடர்ந்து வெங்கடேசன் அவரது நண்பர் பால்ராஜ் ஆகிய இருவர் மீது வானூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.