முழு ஊரடங்கை மீறி சென்னை பூவிருந்தவல்லியில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் சென்னைக்கு மிக அருகே உள்ள பூந்தமல்லி அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசம் போன்றவற்றில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த இளைஞர்கள் சாலையின் குறுக்காகவும் வாகனங்களுக்கு இடையே புகுந்தும் வாகன சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அச்சமுற்ற வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி நிறுத்தி அச்சத்துடன் ஓட்டிச் செல்கின்றனர். முழு ஊரடங்கு என்பதால், ஒரு கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரேடியாக 20 இளைஞர்கள் எப்படி இப்படி குவிந்தார்கள் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்ரக இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பதோடு, அதில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸரையும் பொறுத்திவைத்துள்ளனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.