சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு சைக்கிள் கிளப் ஒவ்வொரு ஆண்டும் சமூக விழிப்புணர்வுக்காக கடந்த 10 ஆண்டுகளாக சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. அதனையொட்டி இந்த 10- வது ஆண்டில் தமிழ்நாடு சைக்கிள் கிளப் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து மதசார்பின்மை மற்றும் சுற்றுச்சூழலை வலியுறுத்தி 1008 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரத்தை ஞாயிறு அன்று தஞ்சாவூரில் தொடங்கியுள்ளனர்.இதில் சிங்கப்பூர், சுவீடன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் தமிழ்நாடு,நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் தஞ்சையில் இருந்து சிதம்பரம், வேளாங்கண்ணி, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை, அழகர் மலை ஆகிய ஊர்களின் வழியாக 1008 கி.மீ கடந்து இறுதியாக தஞ்சையில் பேரணியை முடிக்க உள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு பேரணியின் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள ராஜாராம் கூறுகையில், "நாம் அனைவர் வீட்டிலும் இருசக்கர வாகனம் உள்ளது. அதேபோல் பாதிக்கு மேற்பட்டோர் வீடுகளில் கார்கள் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் அல்லது இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு இருசக்கர வாகனத்தையும், காரையும் பயன்படுத்த கூடாது.
அப்படி பயன்படுத்துவதால் காற்று தொடர்ந்து மாசடைகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதனை அனைவரும் கருத்தில் கொண்டு சைக்கிள் ஓட்ட வேண்டும். இதனால் உடல் வலுபெறும். மேலும் நம் நாடு மதசார்பின்மையை கொண்ட நாடாகும். இங்கு வாழும் மக்கள் மதங்களை கடந்து சகோதர்களாக வாழ வேண்டும் என வலியுறுத்தி இந்தவிழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாங்கள் செல்லும் சாலைகளில் மக்கள் கூடி இதுகுறித்து விவரம் கேட்கிறார்கள் அவர்களிடம் நின்று பதில் கூறி செல்கிறோம் என்றார். இந்த விழிப்புணர்வு பேரணியில் சிதம்பரம் சுற்றுலா துறை அலுவலர் சின்னசாமி, தமிழ்நாடு சைக்கிள் கிளப் ஒருங்கிணைப்பாளர் வசந்த், உறுப்பினர்கள் ராஜாராம், வெங்கடேசன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.