‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகி கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருவிழாவின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது போகி. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும். அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது. சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களை தீயிட்டு வருகின்றனர்.
புகையில்லா போகியை மக்கள் கொண்டாட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருந்தது. மாவட்டம் தோறும் அதற்கான பிரச்சாரம் செய்யப்பட்டது. பண்டிகையைக் கொண்டாட வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டன. அரசின் வழிகாட்டுதலின்படி புகையில்லா போகியைக் கொண்டாடப் பெரும்பான்மையான மக்கள் ஆர்வம் காட்டி கொண்டாடுகின்றனர்.
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.