மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அடையாரில் கலாஷேத்ரா பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்து இணையத்தில் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தை கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம், இது குறித்து டிஜிபி விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் தேசிய மகளிர் ஆணையமே விசாரணையில் இறங்கும் எனவும் தெரிவித்திருந்தது.
சென்னை அடையாரில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பேராசிரியரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் அளித்த புகாரில், தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்கள் அதுபோல் எதுவும் நடக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
மாணவி கூறியதன் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு வழங்கிய உத்தரவை வாபஸ் பெற்றது. ஆனால், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா 3 மணிநேரம் அடையாரில் உள்ள கலாஷேத்ராவில் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் முறைப்படி விசாரிக்காமல் மாணவ மாணவிகள் அனைவரையும் ஒன்றாக வைத்து விசாரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விசாரிக்கச் சொல்லிக் கூறியதை வாபஸ் பெற்ற தேசிய மகளிர் ஆணையம், பின் அதை வாபஸ் பெற்று மீண்டும் ரகசியமாக வந்து 3 மணிநேரம் விசாரித்துவிட்டுச் சென்றது மாணவிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கலாஷேத்ரா நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும் தேசிய மகளிர் ஆணையமும் முறையாக நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும் கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.