பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.
இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விமான மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடலானது அவரது இல்லம் உள்ள அமைந்துள்ள தி நகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பிரபலங்களும் அஞ்சலி செலுத்த அங்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் பவதாரணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது உடலானது இன்று தேனி எடுத்துச் செல்லப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனியில் உள்ள இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் அவரது தாயார் மற்றும் மனைவி ஆகியோரின் நினைவிடத்திற்கு இடையே பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பண்ணைபுரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.