தேர்தல் ஆணையம் மதுரை சித்திரை பெருவிழாவன்று பொது தேர்தலை அறிவித்துள்ளது. தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் , பொதுநல அமைப்புகள் ,மக்கள் என அனைவரும் மாற்று தேர்தல் தேதி அறிவிக்க ஆலோசனையை வலியுறுத்துகிறார்கள். இந்நிலையில், உயர்நீதிமன்றம் பரிசீலியுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் எந்த கருத்தையும் காது கொடுத்து கேட்க இந்திய தேர்தல் ஆணையம் தயாரில்லை என்பது தமிழக மக்களை அவமதிப்பதற்கு சமமாகும் என பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார அணி மாநிலசெயலாளர் வே.ராஜரத்தினம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்திய பிரதமர் அனைவரும் வாக்களிக்க வாருங்கள் என்று வெளிப்படையாக தேச மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் .இந்திய பிரபலங்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோளும் வைத்துள்ளார்கள் . இந்த நேரத்தில் 10 மாவட்டம் சார்த்த ஒரு ஆன்மிக விழா தேர்தல் தேதி அன்று வருகின்றது .பாதுகாப்பு பிரச்சினை ஒருபுறம் என்றாலும் அறிவிக்கப்பட்ட தேதியை மாற்ற இயலாது என்பதும் வாக்காளர்கள் வாக்களித்தால் அளிக்கட்டும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற தோனியில் உள்ளது. இது நியாயமற்றது.
ஆன்மீகம் அல்லது வாக்குச்சாவடிக்கு செல்வதா என்று வாக்காளர்களை முடிவு எடுக்க கட்டாயப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை .விழா தேதிகளை சரிபார்க்காமல் அறிவித்தது தேர்தல் ஆணைய அதிகாரிகளின் தவறு .இதற்கே அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . 6 கோடி மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமையாகும் .நாளை நடக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணையில் தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.